வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

இரட்டை இலை சின்னம் யாருக்கு?
வியாழன் 09 மார்ச் 2017 15:49:36

img

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா, பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று மோதல் வலுக்கத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். இதையடுத்து, அவர் வெற்றிபெற்ற ஆர்.கே. நகர் தொகுதியில், ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகள் உருவாகி உள்ளன. பொதுச் செயலாளர் சசிகலாவின் தேர்வு செல்லாது என்று பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். இதற்குத் பதில் அளிக்க, சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்திருந்தார். அதை நிராகரித்த தேர்தல் ஆணையம், மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா, பதில் அளிக்கும்படி தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வில் சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தி.மு.க. மற்றும் இதர கட்சிகளும் களமிறங்கத் தயாராகிவருகின்றன. அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல், தங்களுக்கு சாதகமாக அமையும் என்று தி.மு.க. தரப்பு கருதுகிறது. அதேநேரத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் ஆதரவாளர்கள் நமக்குத்தான் வெற்றி என்று சொல்லத் தொடங்கி உள்ளனர். இதர கட்சிகள் தேர்தலில் போட்டியிடலாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். அ.தி.மு.க-வில் சசிகலா அணியிடம் இரட்டை இலை சின்னம் இருந்துவருகிறது. அதைக் கைப்பற்றும் நோக்கத்தில், பன்னீர்செல்வம் அணியினர் காயை நகர்த்திவருகின்றனர். அதற்கு அடித்தளமாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாம் என்ற திட்டமும் அந்த அணிக்கு உள்ளது. மார்ச் 10-ம் தேதிக்குப் பின், தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பதிலுக்குப் பிறகு, பன்னீர்செல்வம் அணியினர் அதிரடியாக இரட்டை இலை சின்னத்தை மீட்கக் களமிறங்க உள்ளதாக அந்த அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும், பன்னீர்செல்வம் தலைமையில் அந்த அணியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதற்கு சில நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். வடசென்னை மண்ணின் மைந்தனான அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனனைக் களமிறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பெரும்பாலானவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். மதுசூதனன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், தீபாவுக்கு நிச்சயம் பன்னீர்செல்வம் அணியினர் ஆதரவு அளிக்க மாட்டார்கள். மேலும், மதுசூதனனும் இரட்டை இலை சின்னத்துக்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோருவார். இது, நிச்சயம் சசிகலா அணிக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அப்போது, தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவின்படி அடுத்தகட்ட நகர்வுக்கு பன்னீர்செல்வம், சசிகலா அணியினர் செல்வார்கள். இதுகுறித்து பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், "மார்ச் 10-ம் தேதிக்குப் பின், தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்குப் பிறகே சசிகலா மற்றும் அவரது அணியினரின் நிலைமை தெரியும். அதற்குள் அவர்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுவிட்டார்கள். எங்கள் அணியில் உள்ளவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக சசிகலா சொல்கிறார். அதற்கான அதிகாரம் அவரிடம் இல்லை. நாங்களும் சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்டவர்களை நீக்கிவிட்டோம். சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனமே செல்லாது என்று சொல்லிவருகிறோம். இந்தச் சமயத்தில் அவர், எப்படி எங்கள் அணியை சேர்ந்தவர்களை நீக்க முடியும். தேர்தல் ஆணையத்தின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அ.தி.மு.க-வின் விதிப்படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆர்.கே.நகரில் நிச்சயம் எங்கள் அணியைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவர் அந்தத் தொகுதியின் மண்ணின் மைந்தனாக இருப்பார். அந்த வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். தேர்தல் ஆணையத்தால் சசிகலா நியமனம் செல்லாது என்று அறிவிப்பு வந்தால், உடனடியாக அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்து, இரட்டை இலையை நாங்கள் கைப்பற்றுவோம். கட்சியினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் எங்களுக்குத்தான் ஆதரவு இருக்கிறது. அதை உண்ணாவிரதப் போராட்டம்மூலம் நிரூபணமாகிவிட்டது" என்றார். டி.டி.வி.தினகரன் தரப்பில் பேசியவர்கள், ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வுசெய்யும் பணியில் ஈடுபட்டுளோம். கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, வேட்பாளரை அறிவிப்பார். எங்களைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் அணியினரை எங்களுக்கு எதிரியாகக் கருதவில்லை. அ.தி.மு.க-வின் எதிரி, தி.மு.க. ஆர்.கே.நகர் தொகுதியில் நிச்சயம் எங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். அந்தளவுக்கு ஜெயலலிதா, பல நலத் திட்டங்களை அந்தத் தொகுதியில் செய்துள்ளார். மக்கள் சேவைக்காக எங்களுக்கு அந்தத் தொகுதியில் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையம் எங்களது பதிலை ஏற்றுக் கொள்ளும்" என்றனர். தீபாவின் ஆதரவாளர்கள் கூறுகையில், "ஏற்கெனவே ஆர்.கே. நகரில் போட்டியிடுவேன் என்று தீபா தெரிவித்துள்ளார். அதன்படி நிச்சயம் அவர் போட்டியிட வேண்டும். ஆர்.கே. நகரில் தீபா போட்டியிட்டால், வெற்றி எங்களுக்குத்தான். தீபா தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது. ஏற்கெனவே தீபாவுடன் இணைந்து பணியாற்றுவதாக பன்னீர்செல்வம் அணியினர் அறிவித்துள்ளனர். இதனால் அவரும் தீபாவுக்கு ஆதரவு அளிப்பார் என்று நம்பிக்கை உள்ளது. பன்னீர்செல்வம் அணியினரின் முடிவுக்குப் பிறகு, நாங்கள் அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம். வேட்பாளராக தீபா நிற்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவோம். அவர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்" என்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
img
தீவிரவாதிகளை உருவாக்கி அமைச்சரை கொல்லனும்??;என்று பேசிய தி.மு.கவினர் மீது புகார்!!

ஆர்ப்பாட்டத்தில் அரிமழம் ஒ.செ. ராமலிங்கம் பேசும் போது...

மேலும்
img
நிலானி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ள அவருக்கு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img