ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

அரசியலுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை கல்வி அமைச்சு சீரழிக்கிறதா?
புதன் 03 ஜனவரி 2018 16:16:53

img

மலேசியாவின் 60 ஆண்டு கால வளர்ச்சிக்கு மலேசியக் கல்வியமைச்சின் நீண்ட காலத் திட்டங்கள் பேரளவில் பங்காற்றியுள்ளதா என்ற கேள்விக்கு நிச்சயமாகப் பதில் எதிர்மறையாகவே இருக்கும் என்பதை யாருமே மறுக்க முடியாது.

* தனியார் பள்ளிகளின் எண் ணிக்கையில் அபரிதமான வளர்ச்சி

* அனைத்துலகப் பள்ளிகளின் நிர்மாணிப்பில் ஏற்றம்

* அண்டை நாடான சிங்கப் பூரில் பயில்வதற்கு பெற்றோர் காட்டும் ஆர்வம்

* சீன இடைநிலைப்பள்ளி களின் வியக்கத்தகு மாணவர்கள் எண்ணிக்கை.

* வீடுகளிலிருந்தே படிக்கும் மாணவர்களின் (Home Schooling) தேர்வு போன்றவை அரசாங்கத்தின் கல்வி நடவடிக்கைகளில் மிகப் பெரிய பின்னடை வுகள் இருப்பதைக் காட்டவில்லையா?

அரசாங்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி திட்டங்கள் தொடர்ச்சியானவையாகவும் எதிர்கால சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல்களை அறவே கொண்டிருக்கவில்லை என்பதையும் யாராலும் மறுக்க முடியுமா? மலேசியக் கல்வி அமைச்சு கல்வி திட்டங்களை அரசியலாக்கி வருவதன் வழி மாணவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறி யாக்குவது எந்த வகையில் நியாயம் எனபதை ஏவுகணை கேட்கின்றது.

அரசியல் நோக்கமுடைய கல்வி திட்டங்கள்

மலேசியக் கல்வி அமைச்சைப் பொறுத்தவரையில் இதுவரையிலும் ஒவ்வொரு கல்வியமைச்சர் நியமனத்தின் போதும் தேசிய கல்வி திட்டம் மாறுவதாகவே அறிய வேண்டியுள்ளது. நாட்டின் எதிர்கால தேவைகளை முன்வைத்து கல்வி திட்டங்கள் வரையப்படாமல் கல்வி அமைச்சரோ அல்லது பிரதமரை வைத்தே கல்வி திட்டங்கள் அமலாக்கம் காண்பது நியாயமான நடவடிக்கையா? எதிர்கால தலைமுறையின் மேம்பாட்டினையும் சவால்க ளையும்  முன் வைத்து கல்வி திட்டங்கள் வரையப்படாமல் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்காக கல்வி நடைமுறைகளை வகுப்பது சரியா? ஒவ்வொரு கல்வி திட்ட அமலாக்கத்தின் போதும் மாணவர்களை ஆய்வுக் கருவியாகப் (Test Tube) பயன்படுத்துவது முறையா? எதிர்க்கட்சிகள் எதிர்த்தால் மறுநாளே ஒரே அறிவிப்பில் கல்வி திட்டத்தையே மாற்றும் அவலம் நியாயமானதா? போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் கல்வி அமைச்சு பதில் தரப் போவதில்லை.

2003-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட (பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதுவின் சிந்தனையின் வழி) கணிதம் மற்றும் அறிவியலை ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறை மிகச் சிறந்த திட்டமாக அமைந்திருந்த போதிலும் நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் இவ்விவகாரத்தினை அரசியலாக்கியபோது ஒரே இரவில் அத்திட்டத்தினை ரத்துச் செய்து மாணவர்களின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கிய தேசிய முன்னணியின் செயல் பாடுகளுக்கு அடிப்படைக் காரணம் அரசியல் லாப நோக்கம்தானே?

அரசியல்  நகர்விற்காக எதிர்கால தலைமுறையின் கல்வி வாய்ப்புகளை முடக்குவது மலேசியாவில் மட்டுமே நடந்து வருவதாகவே ஏவுகணை கூறு வதை யாராவது மறுக்க முடியுமா?

நள்ளிரவில் முடிவு செய்து பகலில் செயல்படுத்துவதா?

மலேசியக் கல்வி அமைச்சின் கல்விக் கொள்கைகளும் கல்வித் திட்டங்களும் வானவில்லைப் போல தோன்றி மறைவதைப் போலவே அமைந்தி ருப்பதாக ஏவுகணை கருதுகின்றது. 2016ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கத்தின் மானியத்துடன் தேசியப் பள்ளிகளில் மட்டுமே அமலாக்கம் கண்ட இரு மொழி பாடத் திட்டத்தில் அமலாக்கத்தில் மலேசிய கல்வி அமைச்சு செய்திருக்கும் கடைசி நேர அதிரடியான அறிவிப்பு (eleventh hour announcement) மலேசியர்களிடையே மிகப்பெரிய அதிர்வினை ஏற்படுத்தியிருப்பதை ஏவுகணையால் உணர முடிகின்றது.

இரவில் கனவு கண்டு பகலில் செயல்படுத்தும் நடைமுறையினைக் கல்வி அமைச்சு செயல்படுத்துவது மாணவர்களின் எதிர்காலத்திற்கு வைக்கப்படும் வேட்டு என்பதை உணரவே இல்லையா? இரட்டை மொழித் திட்ட (Dual Language Programme - DLP) அமலாக்கத்தினை சரியான திட்டங்களுக்கு பின்னரே நடைமுறைப்படுத்திய மலேசியக் கல்வி அமைச்சு (Kementerian Pelajaran Malaysia) 2018ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இரட்டை மொழி பாடத் திட்டம் முழுமையாக ஒத்தி வைக்கப்படுவதாக கூறியிருப்பது மலேசியர்களிடையே மிகப் பெரிய எதிர்ப்பு உணர்வினை ஏற்படுத்தியுள்ளதை கல்வியமைச்சில் உள்ளவர்கள் யாருமே உணரவில்லையா?

மிகப்பெரிய பொருட்செலவிலும் நீண்ட நாள் ஆய்விற்குப் பின்னரும் உருவாக்கம் கண்ட இரட்டை மொழித் திட்டம் (தேசிய கல்வி பெருந்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது - PPPM) திடீரென ஒத்தி வைக்கப்படுவதாகக் கூறுவது  மலேசியக் கல்வியமைச்சின் செயல்பாடுகளை கேள்விக்குறியாக்காதா? ஒரே ஒரு  நீதிமன்ற வழக்கிற்காக ஒட்டு மொத்த டி.எல்.பி திட்டத்தையே ஒத்தி வைப்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.

டி.எல்.பியின் அமலாக்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பின்னரே வழங்கப்பட்டிருந்தும் ஓராண்டுகால அமலாக்கத்திற்குப் பின்னர் ஒத்தி வைப்பது விவேகமற்ற செயலாகவே ஏவுகணை பார்க்கின்றது. டி.எல்.பி  தொடர்பான முடிவினை எடுப்பதற்கு முன்னர் ஏன் மலேசியக் கல்வி அமைச்சு  பெற்றோர்களின் கருத்துகளை ஆராயவில்லை. டி.எல்.பியை ஒத்தி வைக்கும் முடிவும் எதிர்க்கட்சிகளின் தாக்கத்தி னால் உருவானதா என்பதை ஏவுகணை அறிய விரும்புகின்றது.

மாணவர்கள் அரசியல் பலியாடுகளா?

அரசாங்கம் கல்வியையும் அரசியலாக்கி வேடிக்கை பார்ப்பது மிகப்பெரிய பின்னடைவினை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதை ஏன் உணரவில்லை. டி.எல்.பி திட்டத்தினை முடிவு செய்வது பெற்றோர்களே என்பதன் அடிப்படையில் சம்பந்தமே இல்லாத அரசு சாரா இயக்கங்களின் கோரிக்கைக்குச் செவி சாய்ப்பது நியாயமா? எவ்வளவு காலத்திற்கு டி.எல்.பி திட்டத்தை மலேசியக் கல்வி அமைச்சு ஒத்தி வைத்துள்ளது என்ற கேள்விக்குப் பதில் மர்மமாகவே இருக்கின்றது. இதுவரையிலும் மலேசியக் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் இதன் தொடர்பில் மௌனமாகவே இருந்து வருகின்றார். நமது சமூகத்தினைப் பிரதிநிதித்து துணைக் கல்வியமைச்சராக இருப்பவரும் அதைவிட மௌனமாகவே இருந்து வருகின்றார்.

மலேசிய கல்வியமைச்சைப் பொறுத்தவரையில் மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முன்னுரிமை வழங்க மறுப்பதாகவே அறிய வேண்டியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடாக மலேசியாவை உருவாக்கும் கனவும், தொழிலியல் புரட்சி 4.0த்தை வெற்றிகரமாக்கும் திட்டமும் கானலாகிப் போகின்ற நிலையையே மலேசியக் கல்வி அமைச்சு உருவாக்கி உள்ளதா? நாளை தொடர்வோம்! 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img