வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

இலங்கை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை
புதன் 27 செப்டம்பர் 2017 17:24:18

img

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 எதிரிகளுக்கு ட்ரையல் எட் பார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

வன்புணர்வு, கொலைச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி நடந்தது.

தண்டனை பெற்றவர்களில் இவ் வன்புணர்வுக் கொலையின் சூத்திரதாரியாகிய சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்த வன்புணர்வு சம்பவத்தை வீடியோ மூலமாக வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த வன்புணர்வுக் கொலைச் சம்பவம் சர்வதேச ரீதியில் திட்டமிடப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் சார்பில் ட்ரையல் எட் பார் விசாரணையின் ஆரம்ப தினத்தன்று நீதிபதிகளின் முன்னிலையில் ஆஜரான பதில் சட்டமா அதிபர் டபிள்யு.டி.லிவேரா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் 300 பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்ப்பில், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷயந்த், ஜெயதரன் கோகிலன், சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகிய ஏழுபேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திரிகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ட்ரையல் எட் பார் விசாரணை நடைபெற்றது.

காட்டுப்பாதையில்...

மாணவி வித்தியா தனது வீட்டில் இருந்து பாடசாலைக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார். இவர் வழக்கமாகப் பாடசாலைக்குச் செல்லும் காட்டுப்பாதையில் உள்ள பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் கைகால்கள் கட்டப்பட்டு, வாய்க்குள் துணி அடைக்கப்பட்ட அலங்கோலமான நிலையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வாய்க்குள் துணி அடைக்கப்பட்டமையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தலையில் அடிபட்டதனால் மூளையில் குருதிக் கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்திருந்தது. வித்தியா கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார் என உடற் கூற்றியல் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புங்குடு தீவை உலுக்கிய சம்பவம்

இந்தக் கொலைச்சம்பவம் புங்குடுதீவு பகுதியையே உலுக்கியிருந்ததுடன், யாழ் குடாநாடு மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குக் கலகம் அடக்கும் பொலிசாரைக் களத்தில் இறக்க வேண்டிய தேவை எழுந்திருந்தது. இந்தச் சம்பவத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதுடன் அரச சொத்தாகிய நீதிமன்றத்திற்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 139 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் புங்குடுதீவைச் சேர்ந்த சகோதரர்களான 40 வயதுடைய பூபாலசிங்கம் இந்திரகுமார், 34 வயதுடைய பூபாலசிங்கம் ஜெயக்குமார், 32 வயதுடைய பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்களைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி புங்குடுதீவு மக்கள் வீதியில் இறங்கி பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மின் கம்பத்தில் கட்டிவைத்து அடி

இக்குற்றத்தின் சூத்திரதாரியாகக் கருதப்படுகின்ற சுவிஸ்குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரைப் பிடித்துத் தாக்கிய ஊர் மக்கள் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் பொலிசார் அவரை மீட்டு கைது செய்து கொண்டு சென்றனர்.

அதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்து, அவரைப் பாதுகாப்பதற்காக முற்பட்டார் என கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத் தலைவராகிய வி.ரீ.தமிழ்மாறன் மீது குற்றம் சுமத்திய பொதுமக்கள் அவரை அந்த இடத்தில் இருந்து வெளியேற முடியாதவாறு முற்றுகையிட்டிருந்தனர்.

பின்னர் பொலிசார் அவரையும் சுவிஸ் குமாரையும் கோபம் கொண்டிருந்த பொதுமக்களிடமிருந்து காத்து, மாற்று வழிப்பாதையாக கடல் வழியூடாகப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். ஆயினும் சுவிஸ் குமார் உடனடியாக பொலிசாரினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து சில தினங்களின் பின்னர் அவர் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

குடும்பத்தை சந்தித்த ஜனாதிபதி

வித்தியா மீதான கூட்டுப்பாலியல் கொலைச்சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்னர் அவருடைய தாயாரையும் சகோதரனையும் சந்தித்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட நீதிமன்றம் ஊடாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், வித்தியாவின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்தால் வீடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

சுமார் பத்து மாதங்கள் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர், வித்தியாவின் கொலைக்கான காரணத்தை பொலிசார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வெளியிட்டனர்.

ஒருதலைக் காதல்

வித்தியாவை புங்குடுதீவைச் சேர்ந்த சிவதேவன் துஷ்யந்த் என்பவர் ஒருதலைப்பட்சமாகக் காதலித்தார். வித்தியா அதற்கு உடன்படாத காரணத்தினால் அவர் மீது பழிதீர்த்துக்கொள்வதற்கு, தனது நண்பன் தில்லைநாதன் சந்திரஹாசனுடன் சேர்ந்து அவரைக் கடத்துவதற்கு அவர் திட்டமிட்டார். இந்தத் திட்டத்திற்கு சுவிஸ்குமார் சூத்திரதாரியாகச் செயற்பட்டார்.

ஒரு திருட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டமைக்காக வித்தியாவின் தாயார் அளித்த சாட்சியம் காரணமாக ஏற்கனவே பகை உணர்வு கொண்டிருந்த இருவர், இவர்களுடன் மேலதிகமாகச் சேர்ந்து கொண்டனர். வித்தியா மீது பழிதீர்க்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் திட்டத்தின்படி வித்தியா பாடாசலைக்குத் தனிமையில் சென்ற போது ஆளரவமில்லாத இடத்தில் வைத்து கடத்தப்பட்டு, கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின்னர் சிவதேவன் துஷ்யந்த் மற்றும் தில்லைநாதன் சந்திரஹாசன் ஆகிய இருவரினால் கொலை செய்யப்பட்டார் என பொலிசார் தமது ஆரம்ப விசாரணை அறிக்கையில் தெரிவித்தனர்.

11 பேர் மீது குற்றச்சாட்டு

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என 11 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் இருவருக்கு எதிராகச் சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்திற்காக அந்த இரண்டு பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, கொல்லப்பட்ட வித்தியாவின் தாயாரை மிரட்டிய குற்றத்திற்காக சுவிஸ் குமாரின் தாயார் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளின் பின்னர் வித்தியாவின் கொலை வழக்கு ட்ரையல் எட் பார் முறையில் யாழ் மேல் நீதிமன்றத்தின் சமாதான அறையில் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இது, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதலாவது ட்ரையல் எட் பார் விசாரணை என்பது குறிப்பிடத்தக்கது.

41 குற்றச்சாட்டுகள்

இந்த வழக்கில் மூன்று சகோதரர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோருடன் மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷ்யந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகிய 9 பேர் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டனர்.

இந்த எதிரிகளுக்கு எதிராக, சட்டமா அதிபரினால் 41 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இந்த வழக்கில் கண்கண்ட சாட்சியாக ட்ரையல் எட் பார் விசாரணையின்போது மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் தோன்றிய மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன், வித்தியா எவ்வாறு கடத்தப்பட்டார் என்பதையும் அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பதையும் தனது சாட்சியத்தில் விவரித்தார்.

அந்தப் பாழடைந்த வீட்டில் கூட்டு வன்புணர்வு நடந்ததாகவும் ஸ்மார்ட் ஃபோனில் வீடியோ படம் எடுத்ததாகவும், அந்த வீடியோவை சுவிஸ் குமாருக்குக் கொடுக்க வேண்டும் என்றும், அவர் அதனை வெளிநாட்டுக்கு கொண்டு போகப் போகின்றார் என்றும் அவர்கள் பேசிக் கொண்டதாகவும், புவனேஸ்வரன் சாட்சியமளிக்கையில் கூறினார்.

வன்புணர்வுக்குப் பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த வித்தியாவை, அந்தப் பாழடைந்த வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் பற்றைக்காட்டில் உள்ள ஒர் அலரி மரத்தடிக்கு, நால்வரும் கைத்தாங்கலாகத் தூக்கிச் சென்றனர்.

அந்த மரத்தில் வித்தியாவின் கைகள் இரண்டையும் கழுத்துக்குப் பின்னால் இழுத்து ஒன்றாகச் சேர்த்து, அவருடைய பாடசாலை சீருடையின் இடுப்புப் பட்டியினால் கட்டினார்கள். வித்தியாவின் புத்தகப் பையின் பட்டியினாலும், சப்பாத்துக் கயிறுகளினாலும் அவருடைய கால்கள் இரண்டையும் இழுத்து மரத்துடன் கட்டினார்கள்.

அவருடைய வாயையும் உள்ளாடைத் துணியினால் அடைத்தார்கள். வித்தியாவின் உடைகளை அவர் மீது போட்டார்கள் என நடராஜா புவனேஸ்வரன் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

ட்ரையல் எட் பார் நீதிமன்ற விசாரணை முறையில் இந்த வழக்கு கடந்த நான்கு மாதங்கள் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
தந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள் 

மகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன

மேலும்
img
இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது

ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான

மேலும்
img
பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மக்களின்

மேலும்
img
மைத்திரிபாலா எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க சட்ட விரோதமானதாகும்’-திருமாவளவன்

சிறிசேனா திடீரென புதிய பிரதமராக

மேலும்
img
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சி கலைகிறது 

கூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img