செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

பினாங்கில் இந்துக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு புதிய இடம்!
புதன் 19 ஏப்ரல் 2017 12:55:37

img

பினாங்கு மாநில இந்துக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு மாநிலத்தின் தீவுப்பகுதியில் உள்ள ஜாலான் யோர்க் ஆற்றங்கரையில் புதிய இடம் அமைக்கப் படுகிறது. இன்னும் சில தினங்களில் அவ்விடத்தில் ஈமச்சடங்கு காரியங்கள் செய்வதற்கு மக்கள் அனுமதிக்கப்படுவர் என்று பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. இராமசாமி நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். பினாங்கு மாநிலத்தில் கடற்கரையோரத்திலும் ஆற்றங்கரையிலும் கருமக்கிரி போன்ற ஈமச்சடங்கு செய்வதற்கு ஊராட்சிமன்ற அதிகாரிகள் தடையும் கெடுபிடியும் காட்டி வரும் வேளையில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வாழும் பினாங்கு மாநிலத்தில் ஈமச்சடங்கு செய்வதற்கு ஒரு இடத்தைகூட மாநில அரசாங்கம் ஒதுக்கித் தராதது குறித்து கடந்த மூன்று தினங்களாக மாநில மக்களின் ஏமாற்றத்தையும் உணர்வையும் மலேசிய நண்பன் வெளிப் படுத்தி வந்தது. பினாங்கு இந்தியர்களின் பிரதிநிதியாக துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பி. இராமசாமி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும் தலை மையேற்று இருப்பதால் இவ்விவகாரத்தில் பாராமுகமாக இருந்து வருவது ஏன் என்று மலேசிய நண்பன் குரல் எழுப்பி வந்தது. பினாங்கு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் தந்ததில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதிலும் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓர் இந்தியர், மாநிலத்தில் ஈமச்சடங்கு செய்வதற்கு ஒரு நிரந்தர இடத்தை ஏற்படுத்திக்கொடுக்கவில்லையென்றால் பிறகு யார்தான் ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என்று நண்பன் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் நேற்று காலையில் அதிரடியாக பினாங்கில் கொம்தார் கட்டடத்தின் 53 ஆவது மாடியில் உள்ள தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்திய டாக்டர் பி. இராமசாமி, ஜாலான் யோர்க், ஆற்றங்கரையில் ஈமச்சடங்கு செய்வதற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும் இன்னும் சில தினங்களில் அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என்றார். நான் தூங்கிக்கொண்டு இருக்கவில்லை. கடந்த 2008 முதல் மக்கள் கூட்டணி அரசாங்கம் மாநில ஆட்சியை ஏற்ற பின்னர் பினாங்கு இந்தியர்களுக்கு நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்பதை பினாங்கு மக்களுக்குத் தெரியும். ஈமச்சடங்கு செய்வதற்கு நிரந்தரமான ஓர் இடத்தை அமைக்க வேண்டும் என்பதில் நான் அலட்சியம் காட்டவில்லை. ஈமச்சடங்கு செய்வதற்கு பெர்மாத்தாங் பாவ் பகுதியில் ஒதுக்கப்பட்ட 2 ஏக்கர் நிலம் காணாமல் போய்விட்டது என்ற குற்றஞ்சாட்டியிருப்பது வருத்தம் அளிக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு பினாங்கு இந்து சங்கப் பிரதிநிதிகளான எம்.பி. ஐயப்பனும், சண்முகநாதனும் மாநில முதல்வர் லிம் குவான் எங்கிடம் ஈமச்சடங்கு செய்வதற்கு நிரந்தரமாக தனியிடம் கேட்டு முறையிட்டனர். பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு நான் தலைமையேற்று இருந்ததால் என்னிடம் அந்தப் பொறுப்பை மாநில முதல்வர் ஒப்படைத்தாரே தவிர என்னிடம் அவர் கட்டளையிடவில்லை. அதனையொட்டி ஈமச்சடங்கு செய்வதற்கான இடத்தை அடையாளம் காணும் பணியை பினாங்கு இந்து அறப் பணி வாரியம் தொடங்கியது. முதலில் பெர்மாத்தாங் பாவ் பகுதியில் 2 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. ஆனால், அங்கு வேறு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளவிருந்ததால் ஜாலான் பகான் எனும் இடத்தில் 2 ஏக்கர் நிலம் கிடைத்தது. இதனால் ஈமச்சடங்கு செய்வதற்கான ஒரு நிரந்தர இடத்தை பெறுவதிலும் அதற்கான கட்டுமானப் பணி தொடங்குவதிலும் சற்று கால தாமதம் ஏற்பட்டது. பினாங்கு தீவில் ஜாலான் யோர்க், ஆற்றங்கரையில் கட்டுமானப்பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் சில தினங்களில் அவ்விடத்தை பயன்படுத்த முடியும். அதேவேளையில் பத்து மாவுங் பகுதி கடற்கரையோரத்திலும் ஈமச்சடங்கு செய்வதற்கான ஓர் இடத்தை நிறுவுவதற்கு பணிகள் தொடங்கப் படும். அதற்கான வரைப்படமும் ஆதாரமாக எங்களிடம் உள்ளது. கடற்கரை பகுதியை பயன்படுத்த வேண்டுமானால் மத்திய அரசாங்கத்தின் அனுமதியை பெற வேண்டும். அதற்கான விண்ணப்பமும் செய்தாகிவிட்டது. மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். பிறை பகுதியிலும் இன்னொரு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பினாங்கில் கடற்கரையோரம் ஈமச்சடங்கு செய்வதற்கு ஓர் இடத்தை அடையாளம் காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மீனவர்கள் உட்பட வட்டார பொது மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே ஈமச்சடங்குக்கான இடத்தை நிர்மாணிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்று நேற்று சுமார் 40 நிமிடம் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் இராமசாமி விளக்கம் தந்தார். இதனிடையே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பினாங்கில் இந்துக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு நிரந்தரமாக தனியிடம் இல்லாமல் இருந்தது பெருங் குறையாக இருந்த போதிலும் இவ்விவகாரத்திற்கு உடனடி தீர்வு கண்ட துணை முதல்வர் இராமசாமிக்கு மாநில இந்துக்கள் தங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். ஒரு நிரந்தர இடம் என்பது மாநில இந்துக்களின் பல ஆண்டு கால போராட்டமாகும். இப்பிரச்சினை தேசிய முன்னணி காலத்திலிருந்து இன்று வரையில் நீடித்து வந்தது. தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு இருப்பது உண்மையிலே மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஆலய நிர்வாகத்தினரும் பொது மக்களும் கருத்துத் தெரிவித்தனர். இந்த செய்தியாளர் கூட்டத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் இராமச்சந்திரன் மற்றும் இதர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img